×

ஏலகிரியில் தொடர்மழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்-ஆக்கிரமிப்பு கால்வாயை சீரமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் ஏக்கர் கணக்கில் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த  ஏலகிரி மலை, தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஏலகிரி மலை, சுமார் 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அவர்களுடைய விவசாய நிலங்களில் அதிக அளவில் நெற்பயிர் விவசாயம் செய்து உள்ளனர். இந்நிலையில் தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களில் வெள்ளம் சூழ்ந்ததால் நெற்கதிர்கள் முழுவதுமாக மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி கோவிந்தசாமி கூறியதாவது:

நான் ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள ரைஸ்மில் வட்டத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நான் விவசாயம் செய்து இருந்தேன். தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் மழை பெய்து வெள்ளம் சூழ்ந்து நெற்பயிர் மூழ்கி உள்ளது. இதனால் இந்த அறுவடையில் கிடைக்கவேண்டிய 25 புட்டி நெல் மகசூல் சேதமடைந்துள்ளது. மேலும் இதுபோன்று 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக புங்கனூர் ஏரியில் இருந்து அத்தனாவூர் ஒருவழியாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நீரோடை ஆகும்.
இந்த நீரோடையை பல வருடங்களுக்கு முன்பு 20 அடிக்கு மேலாக இருந்தது. தற்போது அவை தொழிலதிபர்கள், வீட்டுமனை வாங்குபவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் நீர் ஓடை நான்கு அடியாக உள்ளது. இதனால் புங்கனூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நீரோடையில் செல்ல போதுமான பாதை இல்லாததால் உபரி நீரானது அருகாமையில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது.

இதனால் விவசாயிகள் விவசாய பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Yelagiri , Jolarpet: Paddy crops ready for harvest after floods in agricultural lands due to continuous heavy rains in Yelagiri hills
× RELATED பெங்களூரு தொழிலதிபரின் அட்ராசிட்டி 10...